அக்னி ஸ்தலத்தின் புகைப்பட வடிவங்கள்
தமது தனித்துவத்தின் வெளிப்பாடாக ஒரு குறிப்பிட்ட உருவங்களை தேர்வு செய்து அவற்றை உலகிற்கு காட்டுவது மனித நாகரிகத்தின் வழக்கமாகும். இந்த உருவத்தேர்வுகள் அந்த நகரத்துடன் கொண்ட வரலாற்று தொடர்புகளையோ, அல்லது ஒரு சின்னத்தையோ, அல்லது ஒரு முக்கியமான நிகழ்ச்சியையே வெளிப்படுத்துவதாக அமைகின்றன. காலப்போக்கில், இந்த உருவகங்களே அந்தந்த ஊர்களின் மீது தமது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி, பின்னொரு நாளில் மக்கள் இந்த தனித்துவமான உருவத்தின் மூலமாகவே அந்த நகரத்தினை அடையாளம் கண்டுக்கொள்ள துவங்குகின்றன. இங்கனமே, இங்கு வாழ்ந்திருந்த ஒரு மகானின் புகைப்பட பதிவுகளே அருணாச்சல மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை எனும் புராதன நகரத்தின் முக்கியமான சின்னமாக திகழ்கின்றன.

சங்க காலத்திலிருந்து திருவண்ணாமலை பல்வேறு ஆக்கத்திறன் நிறைந்த மக்களை தன்பால் ஈர்த்து வந்துள்ளது. இந்த ஊரின் முதல் வரலாற்றுப்பதிவு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தின் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கிபி. 850வது ஆண்டிலிருந்து 1280 ஆண்டுவரை அரசு செலுத்திய சோழ ராஜாக்கள் மூலம் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது என கல்வெட்டுகள் காண்பிக்குகின்றன. பாரதத்திலுள்ள மிகப்பெரிய ஆலயங்களின் ஒன்றான இது, பாரம்பரியம், வரலாறு, உற்சவங்கள் போன்ற பல கோணங்களிலும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மாதத்திலும் முழு நிலவன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அருணாச்சல மலையினை சுற்றி வலம் வருகின்றனர். இங்கு நடக்கும் விழாக்களில், கார்த்திகை தீப உற்சவம் மிகச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த சோழர் கால கல்வெட்டுகள், கார்த்திகை தீப திருவிழா சோழர் காலத்திலிருந்தே கொண்டாடப்படுவதாக கூறுகின்றனர். சோழர்கள் மட்டுமன்றி, பல்லவர்கள், ஹோய்சாலாக்கள், விஜயநகர அரசாங்கம், கர்நாடக அரசர்கள், திப்புசுல்தான் மற்றும் ஆங்கிலேயரும் திருவண்ணாமலையினை ஆட்சிப்புரிந்துள்ளனர்.




தம்முள்ளே போர் புரிந்துக்கொண்டிருந்தாலும் பல்வேறு கலை அமைப்புகள் மூலம் பண்டைக்காலத்தின் சிற்பக்கலையையும் முன் கலைகளையும் பராமரித்து காலச்சார இணைப்புகளை ஏற்படுத்தி வந்த பல்வேறு அரசர்கள் மூலம் கலாச்சார மற்றும் முன்கலைசிறப்புகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
இந்த பழம்பெரும் நகரில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கிருத்துவ ஆலயங்களும், மசூதிகளும், ஜைன ஆலயங்களும் விளங்கித்தோன்றுகின்றன. பல்வேறு வகைப்பட்ட சமய மற்றும் கலாச்சார அமைப்புகள் இந்த மலை நகரில் அமைந்துள்ளன. அவர்கள் வாழ்க்கையும், வாழ்வாதாரமும், வாழ்க்கைமுறையும் இந்த மலையை சுற்றியே அமைந்துள்ளன.
அரசியல் ரீதியாகவும் இந்த நகரம் முக்கியமாக திகழ்கிறது. பல்வேறு வகைப்பட்ட மக்கள் தலைவர்களும் கட்சிகளும் இங்கே அமைந்துள்ளன. பல்வேறு கொடிகளும், உருவங்களும், சிலைகளும், சின்னங்களும் இந்த நகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளதை நாம் காணலாம். மக்கள் பொழுது போக்குவதற்காக பல்வேறு திரைப்பட அரங்குகளும் இங்கே அமைந்துள்ளன.
அண்ணாமலையின் சிறப்புக்குறியீட்ட உருவம்

வெங்கட்ராமன் என்ற இயற்பெயருடன் 1879ம் ஆண்டு பிறந்த ஸ்ரீ. ரமணமகரிஷி, அருணாச்சலத்தால் ஈர்க்கப்பட்டார். 1st Sep 1896 திருவண்ணாமலையினை வந்தடைந்தார். தமது 17ம் வயதில் அவருக்கு மிக உயர்ந்த அனுபவம் ஏற்பட்டது. அது என்னவெனில், முழு உணர்வுடன் தேகத்தில் இருக்கும் போதே மரணத்தை அனுபவித்தது ஆகும். இந்த மரண அனுபவம் அவருக்கு உடனடியான ஆன்மீக விழிப்பை தந்தது. இந்த புரட்சிகரமான மாற்றத்திற்கு பின் அவர் தமது இல்லத்தை விட்டு அண்ணாமலையெனும் தெய்வீக மலையால் ஈர்க்கப்பட்டு திருவண்ணாமலை நோக்கி வந்தார். அடுத்த 54 ஆண்டுகளுக்கு அவர் அண்ணாமலையை விட்டு நகரவே இல்லை. 1955ம் ஆண்டு மகா நிர்வாணத்தை அடையும் வரை தம்மை நாடி வந்தோர்க்கெல்லாம் மிக எளிய அதே சமயம் நேரான பாதையில் ஆத்ம விசாரத்தின் மூலம் அத்வைத ஞானம் பெற வழி நடத்தி வந்தார்.

ரமண மகரிஷியின் ஆக்கப்பூர்வமான உள்ளுணர்வு, பல்வேறு கலைகளை உள்ளடக்கியது. அவற்றுள் புகைப்படக்கலையும் ஒன்றாகும். முதன் முதலில் இந்தியாவில் புகைப்படக்கலை அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திர ஜாலம் போன்று எப்படி ஒரு புகைப்பட கருவி புகைப்படங்களை உருவாக்குகின்றது என்னும் அதிசயம் எல்லாரிடத்தும் பரவியது. ஆனால், அதே சமயம், அது ஒருவனை புகைப்படம் எடுத்தால் அவனது ஆன்மாவைத்திருடிவிடும் என்ற அச்சத்தையும் உருவாக்கியது. ஞானிகள் மற்றும் ஆரத்திகள் மத்தியிலும் அநேகர் தம்மை புகைப்படம் எடுத்துக்கொள்ள முன் வரவில்லை.
ரமண மகரிஷி ஒளியின் தாக்கத்தினையும், ரசாயன மாற்றதைப்பற்றியும் எங்கனம் ஒரு புகைப்பட தகட்டில் ரசாயன மாற்றம் ஏற்படுத்துகின்றது என்பதை பற்றியும் கொண்டிருந்த முன்னறிவு அவருக்கு புகைப்பட ஊடகத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்திற்கு காரணமாக இருக்கலாம்.
புகைப்படம் எனும் ஊடகத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகளையும் மற்றும் அதன் எழில் சார்ந்த திறமையையும் ரமண மகரிஷி நன்கு அறிந்திருந்தார்.
இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த புகைப்படக்கலைஞர்களுடன் அவர் சம்பாஷணைகளில் ஈடுபட்டு, எங்கனம் கடந்து விட்ட காலங்களின் நினைவுகளை உயிரோட்டமான பிம்பங்களாக உருவாக்குவது என்பதனை குறித்து வாதிப்பார். PRS Mani, Dr. TNK, GG Welling போன்ற இந்த புகைப்பட நிபுணர்கள் ரமண மகரிஷி மற்றும் ரமண ஆஷ்ரமம் பற்றிய பல்வேறு புகைப்படங்களை உருவாக்கினர். அகில உலகத்திலும் புகைப்பட கலைஞராக செங்கோல் நாட்டிய பிரெஞ்சு நாட்டு புகைப்பட கலைஞரான Henri Cartier-Bresson மற்றும் அமெரிக்க ஆவண புகைப்படக்கலைஞர் Eliot Elisofon போன்றோர் ரமண மகாரிஷியைப்பற்றி பல்வேறு பதிவுகளை உருவாக்கினர். இந்த புகைப்படங்கள் TIME போன்ற உலகளாவிய பத்திரிகைகளிலும் சஞ்சிகளிலும் பதிக்கப்பட்டன. இந்த பத்திரிககளில் மூலம் கிடைத்த உலகளாவிய விளம்பரம், திருவண்ணாமலை நகரம் சர்வதேச அளவில் அறியப்பட ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த புகைப்பட அச்சுகளையும், பதிவுகளையும் பத்திரமாக பாதுகாக்குமாறு ரமண மகரிஷி வலியுறுத்தி வந்தார். விலை மதிப்பில்லாத ரமண மகரிஷி மற்றும் ஆஷ்ரமம் சார்ந்த இந்தப்பதிவுகள் தற்பொழுது ரமண ஆஷ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ளன.




தமிழர்கள் பட உருவங்களை எப்பொழுதும் வழிபடும் பாரம்பரியம் உள்ளவர். சித்திர வடிவில் வழிபடும் இந்த தமிழர் பண்பு, ரமண மகரிஷியின் திரு உருவ புகைப்படங்களையும் வழிபடுவதை உள்ளடக்கியது. ரமணரின் பல்லாயிரக்கணக்கான படங்கள் உலகெங்கிலும் கிடைக்கப்பெற்று வழிபடப்படுகின்றன. ரமணரின் முதல் புகைப்படம் 1902ம் வருடம் எடுக்கப்பட்டது. அவரது புகைப்படங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது ‘மணி புகைப்படம்’ என்று அழைக்கப்படும் PRS மணியால் எடுக்கப்பட்ட மார்பளவு புகைப்படமாகும். இங்கனம் திருவண்ணாமலை நகரமும், ரமணரின் தொடர்பும் இரண்டற கலந்து வளர்ந்து வருகின்றன.
ஸ்ரீ ரமண மகரிஷி / புகைப்பட பதிப்புரிமை (C) P R S மணி / ஸ்ரீ ரமண ஆஷ்ரம புகைப்படக்களஞ்சியம்
மகரிஷி ரமணரின் தற்கால புகைப்பட உருவங்கள்
இங்கனம் திருவண்ணாமலை நகரம் முழுவதும் ரமணரின் புகைப்படங்கள் பரவிக் கிடக்கின்றன. பிரசித்தி பெற்ற புகைப்பட கலைஞர்கள் மட்டுமல்லாது, அறிமுகமில்லாத மற்றும் பிறரும் திருவண்ணாமலை சார்ந்த புகைப்படக்களஞ்சியத்தை உருவாக்கி வருகின்றனர். இங்கு விஜயம் செய்யும் யாத்ரிகைகள் கூட ரமணரின் பிரசன்னத்தை நினைவூட்டும் ஏராளமான புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். அத்துடன் மலையின் மற்றும் நகரத்தின் புகைப்படங்களும் சேர்ந்து வருகின்றன. இ.டி.பி. புகைப்படக்களஞ்சியத்தில் தற்கால இந்திய புகைப்பட நிபுணரான அபுல் கலாம் ஆசாத் அவர்களின் புகைப்படங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.




ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணம்
‘தினம் ஒரு புகைப்படம்’ (Project 365) திட்டத்தில், புகைப்பட கலைஞர் அனுராக் ஷர்மா ‘மகரிஷி ரமணரின் உருவத்தோற்றங்கள்’ என்ற தலைப்பில் திருவண்ணாமலை நகரினைப்பற்றி ஆவணப்படங்கள் எடுக்க உள்ளார். எங்கனம் ரமணரின் உருவப்படங்கள் இந்த நகரத்தின் உள்ளுணர்வையும், எங்கனம் ரமண மகரிஷி திருவண்ணாமலைக்கே ஆதார பிம்பமாக திகழ்கிறார் என்பதும் ஒரு உயிர்த்துடிப்பான உண்மைகளாகும். ஒரு நகரத்தின் கண்ணுக்குத்தெரியாத மிகப்பெரிய சக்தியை, அனுராக் இங்கு எல்லா இடத்திலும் காண்கிறார்.

தாம் நோக்கும் ஒவ்வொரு இடத்திலும் அவர் ஒரு உயிரோட்டமான பிம்பத்தை காண்கிறார். இதில் சிறப்பு யாதெனில் ஏனையோருக்கு முக்கியம் இல்லாத காட்சிகளாக தென்பட்டு ஒதுக்கப்படும் காட்சிகளும் நிகழ்வுகளும் அனுராகின் திறமிக்க கண்களுக்கு உயிதுடிப்புள்ள காட்சிகளாக தென்படுகின்றன. இந்தக் காட்சிகளே நகரத்தின் உயிரோட்டமிக்க இடங்களுக்கு சிறந்த சான்றாக திகழ்கின்றன.
அனுராகின் முதல் கேமரா Cosina C1s. இவர் இதனை தேனிலவுக்கு போகும் போது கொண்டு சென்றார். அதில் ஆரம்பித்து அவர் மென்மேலும் ஆராய்ச்சிகள் செய்து அதனைக்குறித்த அறிவினை வெகுவாக வளர்த்துக்கொண்டார். அவர் இப்பொழுது தொழில் மற்றும் நகரம் சார்ந்த புகைப்படத்துறையில் ஈடுபட்டு புகழ் வாய்ந்த இந்திய மற்றும் சர்வதேச கம்பெனிகளில் தொழில் சார்ந்த புகைப்படங்கள் எடுக்கும் பணியினை செய்து வருகிறார். அவர் Art and Deal போன்ற பத்திரிகைகளில் பல்வேறு தொகுப்புகளை அளித்து வருகிறார். அவரது படைப்புகள் பல்வேறு கண்காட்சிகளிலும் கலை உற்சவங்களிலும் காண்பிக்கப்படுகின்றன. மும்பை மற்றும் பெரு நகரங்களில் இவரது கண்காட்சிகள் நடைபெறுகின்றன. Pro Helvetia – Swiss Art Council அமைப்பு நியூ டில்லி Max Mueller பவன் – ல் ‘parallel city’ என்ற தலைப்பில் அனுராகின் படங்கள் காண்பிக்கப்பட்டன. இது மக்களை பெரிதும் கவர்ந்தது. Indian Art festival லில் அவரது படைப்புகள் காண்பிக்கப்பட்டது அவருக்கு மேலும் பெருமை சேர்த்தது.
அக்னி ஷைலத்தின் புகைப்பட போஸ்ட் கார்டுகள்
‘ரமணரின் உருவங்கள்’ என்ற இந்தக்களஞ்சியத்திலுள்ள புகைப்படங்களை அனுராக் ‘புகைப்பட போஸ்ட் கார்டுகள்’ மூலம் அளிக்க உள்ளார். ஒரு நகரத்தின் உருவகத்தை உலகளாவிய அளவில் எடுத்து செல்லும் வாகனங்கள் இவை. முன் காலத்திலிருந்தே ஒரு நகரத்திற்கோ ஊருக்கோ செய்யும் யாத்ரிகைகள் தமது பயணத்தின் சான்றுகளாகவும் மற்றும் தமது உறவினர் நண்பர்களுக்கும் தமது செய்திகளை அனுப்பும் ஊடகமாகவும் போஸ்ட் கார்டுகளை பயன் படுத்துகின்றனர். இந்தக்கார்டுகள் உலகெங்கிலும் பயணம் செய்கின்றன என்பது நிச்சயம். எனவே தான், “அக்னி ஷைலத்திலிருந்து ரமணரின் புகைப்படங்களை போஸ்ட் கார்ட் வடிவில் அனுப்புகிறேன்” என்கிறார் அனுராக்.




புகைப்படங்கள் எடுப்பது மட்டுமல்ல, அனுராக் தன மனதில் தோன்றிய ஒரு முக்கிய கேள்விக்கும் பதில் தேடுகிறார். உருவமற்ற அத்வைத நிலையே முடிவான நிலை என்று உபதேசித்த ரமணரின் புகைப்படங்கள் எப்படி வழிப்பாட்டு பிம்பங்களாகவும் ஒரு நகரத்தின் ஆதார உருவமாகவும் மாறி விட்டன? மேலோட்டமாய் நோக்கும் பொது ஒரு தத்துவ முரண்பாடு போலவே தோன்றுகிறது. இந்தக் கேள்வியின் உள்ளார்ந்த பொருளினை உணரவும் இவர் ரமண மகரிஷி புகைப்பட கலைஞர்களுடன் நடத்திய உரையாடல்கள், போன்றவற்றினை ஆய்வு செய்வார்.
(தொடரும்….)
தென்னிந்தியாவின் பண்பாடும் வாழ்க்கைமுறையும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. மாறுகின்ற இந்த பண்பாட்டின் வெளிப்பாடுகளை புகைப்பட வடிவில் பாதுகாத்து வைக்கும் ஒரு சிறந்த முயற்சியே இ.டி.பி. அமைப்பினால் தொடங்கப்பட்டுள்ள Project 365 என்று மகுடமிடப்பட்டுள்ள ‘பொதுமை புகைப்படக்கலை திட்டமாகும்’. இதன் முதல்படி தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. பல்வேறு கலாச்சாரங்களின் கோணங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த புராதன நகரத்தின் சிறப்புகளை இந்தியா முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் சம்பிரதாயமான ஊடக வழியில் ஓராண்டுக்காலம் ஆவணப்படுத்துவார்கள். முடிவில் கண்காட்சியும் புத்தகமும் வெளியிடப்படும். இந்த திட்டம் இக்கால இந்திய புகைப்பட கலைஞர் அபுல் கலாம் ஆசாத் அவர்களால் வழி நடத்தப்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் சங்க கால துறைமுக நகரங்களாகிய தொண்டி, முசிறி மற்றும் காவேரி பாயும் நிலம் சார்ந்த அனைத்து ஊர்களின் கலைச்சிறப்பை ஆவணப்படுத்தும்.
இந்த பதிப்பிலுள்ள புகைப்படங்களின் பதிப்புரிமை புகைப்படக்கலைஞரின் உரிமை ஆகும். மீண்டும் பிரசரிப்பதற்கோ வேறு பதிப்புகளில் உபயோகப்படுத்துவதற்கோ இ.டி.பி. நிறுவனத்தின் (Project 365 பொதுக்களஞ்சியம்) முன் அனுமதி அவசியம். மேலும் தகவல் அறிய {0}4175 237405 / {0}94879 56405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் – திரு. ராம் மோகன் / எடிட்டர் ரமநோதயம், ஸ்ரீ. ரமணாஷ்ரமம், திருவண்ணாமலை
