தீன் தயாளின் புகைப்படங்கள்

துளசி ஸ்வர்ண லட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காட்டில் பிறந்தவர். சென்னையில் உள்ள  சிவ நாடார் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றுள்ளார். சமூக வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட இவர் ஆப்ரிக்கா மற்றும் தென்னமேரிக்கா நாடுகளில் பணியாற்றியுள்ளார். சுனாமி மற்றும் தானே புயலின் போது இந்திய மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார்.

ராஜா தீன் தயாள் / சுய உருவப்படம் / மூலம் - இணையத்தளம்
ராஜா தீன் தயாள் / சுய உருவப்படம் / மூலம் – இணையத்தளம்

புகைப்படக்கலை, நவீன கலைகளின் சிகரம். அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஊடுருவி விட்ட உன்னத அடையாளம். காட்சி ரூபங்களிலும் காட்சியகப்படுத்துவதிலும் பண்டைய தமிழக மக்கள் கொண்டிருந்த ஈடுபாட்டினை பறைசாற்றும் கலாச்சார சின்னம். கடவுளை கலையாகவும் கலையினை கடவுளாகவும் வணங்கும் திராவிட மரபின் குறியீடு.

நண்பர் உறவினரின் புகைப்படம், மனதிற்கு பிடித்த நடிகர், நடிகைகள், கடவுள்களின் மற்றும் குருக்களின் உருவச்சித்திரம், அல்லது விருப்பமான இடம், மலர், காட்சி என ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் ஒரு புகைப்படமாவது இருக்கும்.

170px-Camera_obscura
கேமரா அப்ஸ்குரா
1024px-View_from_the_Window_at_Le_Gras,_Joseph_Nicéphore_Niépce_1926_first photograph
நிசிபோரே நியாப்சே எடுத்த புகைப்படங்களில் ஒன்று, 1826
220px-Boulevard_du_Temple_by_Daguerre
டகுரோடைப் முறையை பயன்படுத்தி டகுரோ எடுத்த முதல் புகைப்படங்களில் ஒன்று 1838

கேமரா விஞ்ஞானத்தின் (Camera Obscura) அடிப்படை ஞானம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாம் அறிந்திருந்ததே. சங்ககால சீன தத்துவவாதி மோ டி, கணித வல்லுனர்கள் அரிஸ்டாட்டில் மற்றும் யூக்ளிட் ‘ஊசி துளை கேமரா’ குறித்து விவரமாக எழுதியுள்ளனர். ஆறாம் நூற்றாண்டிலேயே கணித வல்லுநர் அந்தேமியஸ், ‘கேமரா அப்ஸ்குரா’ என்ற இந்த நுட்பத்தை தனது ஆய்வுகளுக்கு பயன்படுத்தியுள்ளார். ஆயினும், பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் புகைப்பட விஞ்ஞானம் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட்டன. 1820களில் பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானி நிசிபோரே நியாப்சே, புகைப்பட பதிவுகளை உருவாக்கினார் அவர் கையாண்ட முறைக்கு நீண்ட நாட்கள் வெளிப்பாடு அதாவது exposure நேரம் தேவைப்பட்டது. 1839ம் ஆண்டு நீயாப்சேயின் துணை விஞ்ஞானி லூயி டாகுறே, டகுரோடைப் என்ற புகைப்பட பிம்பங்கள் மற்றும் அச்சு முறையினை கண்டுபிடித்தார். குறைந்த வெளிப்பாடு நேரமும் தெளிவாக பிம்பங்களை உருவாக்கவும் செய்யும் இந்த முறையையே புகைப்பட விஞ்ஞானத்தின் முதல் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்படுகிறது. சார் ஜான் ஹெர்ஷெல் இவ்வாறு உருவாக்கப்பட்ட அச்சுகளுக்கு ‘’Photography”, அதாவது ஒளியினால் வரையப்படும் ஓவியம் என்ற பெயரை வழங்குகிறார். போடோக்ராபி என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழில் மட்டும் தான் ‘புகைப்படம்’ என்ற தனிச்சொல் உள்ளது. ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட குறுகிய காலக்கட்டத்திலேயே, புகைப்பட விஞ்ஞானம் ஆங்கிலேய அரசால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் உலர்ந்த வெப்ப நிலையிற்கு ஏதுவாக ட்ரை ப்ளேட் முறையும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்பொழுது பாரம்பரிய முறைகளில் ஒன்றாக கருதப்படும் டகுரோடைப் முறையில், ரசம் போன்ற ஆபத்தான உலோகங்கள் வெளியிடும் புகையினால் பிம்பங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு புகையினால் உருவாக்கப்படும் படமானதால் தான் தமிழர் போட்டோக்ராப்பிற்கு புகைப்படம்’ என பெயரிட்டனர். ஆபத்தான ரசம் போன்ற உலோகங்களை பயன்படுத்தியதால், புகைப்படக்கலைஞர்களை ரசசித்தர் என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது.

ஆரம்பக்காலக்கட்டத்தில் புகைப்படங்கள், ஆன்மாவினை சிறைப்படுத்தும், ஆயுளை குறைக்கும் என்றும், சூட் என்ற ஆங்கில வார்த்தை, சுடு, கொல் என்று காலனித்துவ பீதியினை உருவாக்கவும் செய்தது. ஆயினும், இந்தியாவினை ஒரு இலக்காக மாற்ற, ஆங்கில அரசு, இந்திய நாட்டின் சிறப்பை பறைசாற்றும் விதத்தில், ராணுவத்தின் உதவியோடு அழகிய புகைப்படங்களை எடுத்தனர். இந்தியாவில், மனிதரை உண்பவர் உள்ளனர், நோய் மற்றும் பஞ்சம் மட்டுமே உள்ளது என்ற கருத்தை மாற்ற, வானுயர்ந்த கட்டிட பாரம்பரியம், எளிய வாழ்வுமுறை, அழகிய பெண்கள், நிலப்பரப்பு என இந்தியாவின் செல்வங்களை, புகைப்பட பிம்பங்கள் மூலம் உலகிற்கு ஆங்கிலேயர் பறைசாற்றி வந்தனர். அப்போதைய காலக்கட்டத்தில், புகைப்படங்கள் எடுப்பது இப்போது போல் சுலபமானதல்ல. அதிகம் செலவும் தேவையானது. அதனால் தான் வெளிநாட்டவர், வெளிநாட்டவரோடு தொடர்பு உள்ள இந்திய அரசர்கள் மற்றும் ஜமீன்தார்கள் மட்டுமே இந்த கலையினை கையாண்டு வந்தனர்.

புகைப்பட விஞ்ஞானம், ஒரு காலனித்துவ கருவியாக, இந்தியாவின் விசித்திரமான அம்சங்களை உலகிற்கு பறைசாற்றி வந்தது. அதே சமயத்தில் சுதந்திர போராட்டத்தின் போது, இதே கருவி, காலனித்துவ அராஜகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியது. இந்தியன் ம்யுடினி என்றழைக்கப்படும் 1857ம் ஆண்டின் இந்தியாவில் நடைபெற்ற கிளர்ச்சியினை வெளிநாட்டவர் பலரும் புகைப்படம் எடுத்தனர். அது இந்தியாவின் காலனித்துவ ஆட்சின் அராஜகத்தை பலருக்கும் வெளிச்சம் போட்டு காட்டும் விதத்தில் அமைந்தது.

இந்த தாக்கத்திலிருந்து இந்தியாவின் நிலைபாட்டையும், பெருமைமிகு சொத்துகள் என்று இந்தியாவின் மாளிகைகளையும், மக்களையும் சிறப்பம்சமாக காண்பிக்கும் புகைபப்டக்கலைஞர்களுக்கு, ஆங்கில அரசு பெரும் ஆதரவு அளித்தது. இவ்வாறு இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வையை மாற்றி அமைத்த பத்தொன்பதாம் நூற்றாண்டு புகைப்படங்களை எடுத்தவர்களில், இந்தியப் புகைப்படக்கலையின் ராஜா என்றழைக்கப்படும் லாலா தீன் தயாள் (ராஜா தீன் தயாள்) குறிப்பிடத்தக்கவர். உத்தர பிரதேசத்தில் உள்ள சர்தனாவில் 1844ம் ஆண்டு பிறந்தார். பொறியாளராக ரூர்கியில் உள்ள கல்லூரியில் தேர்ச்சி பெற்றார். ரூர்கி கல்லூரியில், பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் 1854ம் வருடம் புகைப்படம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1866ம் வருடம், தலைமை கணக்காளர் மற்றும் வரைவாளராக இண்டோர் அரசவையில் தீன் தயாள் பணியில் சேர்ந்தார். அதே சமயத்தில் புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டினார். மகாராஜா டூகோஜி ராவ் தான் அவரது முதல் புரவலர். நாளடைவில் ஆங்கில கவர்னர் ஜெனரல் ஹென்றி டாலி (டாலி கல்லூரியின் நிர்வாகி) தீன் தயாளின் புகைப்படங்களை கண்டு விருப்பம் கொண்டு ஒரு புகைப்படத்தொழிலகம் துவங்க தூண்டினார். இண்டோரில் துவங்கப்பட்ட இந்த வர்த்தக ஸ்டுடியோவிற்கு பற்பல வாய்ப்புகள் ஆங்கில அரசு கொடுத்து வந்தது.

1870களில்ஆங்கில அரசினரால், இந்திய கலாச்சாரம், மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தும் விதமான புகைப்படங்களை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். சில காலங்களுக்குப்பிறகு இவர் மும்பையிலும் ஹைதராபாத்திலும் ஒளிப்படத்தொழிலகம் கிளைகளை துவங்கினார். ஹைதராபாத்தின் ஆறாம் நிசாம் மஹ்பூப் அலி கான் அசிப் ஜாஹ் அரசவையில் அரசாங்க புகைப்படக்கலைஞராக நியமிக்கப்பட்டார். பின்பு 1885ம் ஆண்டு ஆங்கில அரசினரால் அரசாங்க புகைப்படக்கலைஞராக நியமிக்கப்பட்டார். 1897ம் ஆண்டு ராணி விக்டோரியாவால் ராயல் வாரான்ட், அதாவது முன்பெல்லாம் அரசுகளுடன் வணிகம் புரியும் சிறந்த வணிகர்களுக்கு அரசவைகள் அங்கீகாரம் அளிக்குமல்லவா,. அது போலவே, அவர் இந்தியாவில் எடுக்கும் புகைப்படங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, அவரின் புகைப்படங்களை வாங்க அரசாணை விடுத்தது.

அதன் பிறகு, அரசு மற்றும் அரசு விருந்துனர்களின் இந்திய பயணங்கள் பலவற்றையும் ஆவணம் செய்தார் தீன் தயாள். அவரது புகைப்படங்களில் ரம்மியமான கண்ணைக்கவரும் காட்சிகளும், மாட மாளிகை கட்டிடங்களும், நினைவுச்சின்னங்களும், கோவில்களும், வளம் மிகுந்த அரசினரின் மற்றும் அரசு குடும்பங்களின் உருவச்சித்திரமும், நதி, மலை, அருவி என இயற்கை செல்வங்களும், காட்சிக்கு இதமான பெண்களும் மிகுந்து காணப்படும். வெளிநாட்டவர், இந்தியாவிற்கு வருவதற்கும் இங்கு முதலீடு செய்வதற்கும் எதெல்லாம் தூண்டுமோ, அவையெல்லாம் நேர்த்தியான தொழில் நுட்பம் மற்றும் தீன் தயாளின் அழகியல் திறத்துடன் கலந்து புகைப்படப்பதிவுகளாக, காண்பவர் மனதினை கவர்ந்தது. அந்த சமயங்களில் இருந்த புகைப்பட ஸ்டுடியோக்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக விளங்கிய தீன் தயாள் ஸ்டுடியோவிற்கு, ராஜாக்கள், ஆங்கிலேயே அதிகாரிகள் பலரும் புகைப்படம் எடுக்க ஆர்டர் கொடுத்தனர். பத்தொன்பவதாவது நூற்றாண்டின் சிறந்த புகைப்பட ஆவணங்களை உருவாக்கிய, புகைப்பட உலகின் ராஜா என்றழைக்கப்பட்ட தீன் தயாள், 1905ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

தீன் தயாள், காலனித்துவ மற்றும் நிலவுடைமை கொண்டிருந்த அதிகார வர்க்கத்தின் சேவகராக, தீவிர பிரச்சாரகராக, தந்திரமான வர்த்தகராக தன்னை பிரதிபாலித்துக்கொண்டு, புகைப்படம் எடுத்து வந்தாலும், தற்பொழுது அவரது புகைப்படங்கள், அழிந்து மறைந்துவிட்ட ஒரு காலத்தின் கல்வெட்டாக உயர்ந்து நிற்கிறது. இவரது அரிய புகைப்படங்கள் பலவும் வெளிநாட்டில் உள்ளது. அவரது ஸ்டுடியோவில் மீதம் இருந்த, பெரும்பாலும் நிராகரிக்கப்பட்ட, அல்லது வேண்டாம் என்று தானே ஆர்டர் கொடுத்தவரிடம் கொடுக்காது மாற்றி வைத்த பிளேட்டுகள் பலவற்றையும், சமீபத்தில் IGNCA வாங்கி, பாதுகாத்து வருகிறது. அன்னாரது முப்பது ஆண்டு புகைப்படபயணம் இன்றும் இந்தியாவின் சிறந்த ஆவணமாக இப்பொழுதும் நிலைத்து நிற்கிறது.

(தொடரும்)

இந்த பதிப்பிலுள்ள புகைப்படங்கள் மற்றும் படைப்புகளின் பதிப்புரிமை படைப்பாசிரியரின் உரிமை ஆகும். மீண்டும் பிரசரிப்பதற்கோ வேறு பதிப்புகளில் உபயோகப்படுத்துவதற்கோ இ.டி.பி. நிறுவனத்தின் (Project 365 பொதுக்களஞ்சியம்) முன் அனுமதி அவசியம். மேலும் தகவல் அறிய  {0}94879 56405 / admin@etpindia.org