கவுண்டரம்மா

பழனியம்மா / புகைப்படம் காப்புரிமை (C) அபுல் கலாம் ஆசாத் / தினம் ஒரு புகைப்படம் பொதுமை புகைப்படக்களஞ்சியம்
பழனியம்மா / புகைப்படம் காப்புரிமை (C) அபுல் கலாம் ஆசாத் / தினம் ஒரு புகைப்படம் பொதுமை புகைப்படக்களஞ்சியம்

அண்டை வீட்டார் ஒருவர் சொல்லக்கேட்டு தான், கிரிவலப் பாதையில் உள்ள தோசைக் கடைக்காரம்மாவை தெரியும். பழனியம்மா தான் அவர் பெயர் என்று இன்று தான் ‘தினம் ஒரு புகைப்பட’ திட்ட ஆவணத்திற்காக கேட்டு தெரிந்து கொண்டேன். அம்மா என்று பெரும்பாலும் அனைவரும் அன்போடு அழைப்பர். திருவண்ணாமலையில் நகரிலுள்ள அகரம் என்ற குக்கிராமத்தில் ராஜலிங்கம், கிளியம்மா தம்பதியினரின் இரண்டாவது மகளாவார். இருபத்தி மூன்று வயதில் கோட்டங்கள் கிராமத்தில் உள்ள ராமலிங்கம் என்பவருடன் திருமணம் நடை பெற்றது. தற்பொழுது அவருக்கு 60 வயது. ஆறு வருடங்களுக்கு முன்பு அவர் கணவர் இயற்கை எய்தினார். இரண்டு மகள்கள் திருமணம் முடிந்து தர்தமர் கணவருடன் சென்று விட, இப்பொழுது தனது இரு மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் கூட்டாக வசித்து வருகிறார்.

தினமும் காலை ஏழு மணியளவில் அரைத்த மாவு, மருமகள் செய்த சாம்பார், சட்டினி போன்றவற்றை பெரிய தூக்குகளில் தூக்கிக்கொண்டு அடி அண்ணாமலையில் உள்ள தனது கடைக்கு வருவார். பதினோரு மணி வரை தான் அவரது தோசைக்கடை. அதன் பின்னர், பல லக்க்ஷம் ஆட்கள் வரும் பௌர்ணமி நாளானாலும், வீடு நோக்கி புறப்பட்டுவிடுவார். அடி அண்ணாமலை பகுதிகளில் வாழும் அடியார்கள் பலரும் இவரது தோசைக்கடைக்கு வருவர். சாமியார்கள் மத்தியில் உள்ள கதைகள், அங்கே நடக்கும் விவரங்கள் பலவும் பகிரப்படும், விவாதிக்கப்படும்… இங்கே வரும் அடியார்கள் பெரும்பாலும் சொந்த பெயர் உபயோகப்படுத்துவதில்லை. சிலரின் உருவம், அல்லது இயல்பு, பழக்க வழக்கம், சொந்த ஊர் போன்றவற்றை வைத்து புனைப்பெயர் கொடுக்கப்படும். அகத்தியர், ஆரணியூர்காரன், மூக்குப்பொடி சித்தர் என பெயரிடப்பட்டு, சில காலம் கழிந்த பின்பு, இயற்பெயர் மறக்கப்பட்டு புனைப்பெயரே நிலைத்து நிற்கும்.

பழனியம்மா குடும்பத்தார்க்கு தற்பொழுது 2 ஏக்கர் நிலம் உள்ளது. நெல், பூஞ்செடி, வேர்க்கடலை போன்றவற்றை பருவம் பார்த்து பயிரிடுவர். சிரித்த முகம், தெளிந்த சிந்தனைகளோடு அன்பாக பரிமாறுவார். ‘தினம் ஒரு புகைப்படம்’ திட்டம் துவங்கிய பொது, தினமும் இங்கு தான் தோசை சாப்பிடுவோம். அபுலும் சளைக்காது அன்றைய விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வார். பல அடியார்களோடு இங்கிருந்து பழக்கம் ஏற்பட்டது. இங்கு வரும் பலரின் உருவப்படங்களை அபுல் ‘தினம் ஒரு புகைப்படம்’ திட்டத்திற்காக பங்களித்துள்ளார். பழனியம்மா, தொழிலும் ஒரு தர்மத்தினை கடை பிடிக்கிறார். அடியார்களுக்கென மிக குறைந்த விலையில் உணவளிப்பார். ஒரு சிறிய நகரின் மிக எளிமையான முறையில் வாழும் இவரது வாழ்க்கை ஒன்றும் பெரிய செய்தி அல்ல. ஆயினும், சாதாரண மனிதரின் கலாச்சாரம், வாழ்வுமுறையினை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைக்கும் ‘தினம் ஒரு புகைப்படம்’ பொதுமை புகைப்பட களஞ்சியத்தில் அன்னாரது புகைப்படம் இருப்பதை பெருமையாக கருதுகிறோம்.

நன்றி !

துளசி ஸ்வர்ண லட்சுமி