ஜோதியின் சிரிப்பு

ஜோதி / புகைப்பட காப்புரிமை வருண் குப்தா / தினம் ஒரு புகைப்படம் பொதுமை புகைப்பட களஞ்சியம்
ஜோதி / புகைப்பட காப்புரிமை வருண் குப்தா / தினம் ஒரு புகைப்படம் பொதுமை புகைப்பட களஞ்சியம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஸ்ரீ ரமண ஆஷ்ரமம் பகுதியில் வாழ்பவர்களுக்கும், இங்கு வழக்கமாக வருபவர்களுக்கும் ஜோதியினை அறியாதிருக்க வாய்ப்பில்லை. ரமண ஆஷ்ரமத்தின் எதிரில் தான் இவரது இளநீர் கடை. நெற்றியில் நீண்ட பட்டை, நடுவில் பெரிதாக ரத்த நிறத்தில் பொட்டு, தடித்த உடல், சிரித்த முகம் – இவை தான் ஜோதியின் அடையாளம். வரும் வாடிக்கையாளர்களுக்கு அவரது குடும்ப நலன், ஆரோக்கியம் குறித்த விவரங்களை விசாரித்தபடியே இளநீர் வெட்டித்தருவார். கடந்த ஆறு மாதங்களாக ஜோதியினை காண முடிவதில்லை. விசாரித்ததில் கணவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டிலே இருப்பதாக கேள்வி. ‘தினம் ஒரு புகைப்படம்’ – பொதுமை புகைப்பட திட்டத்தில், புகைப்பட கலைஞர் வருண் குப்தா எடுத்த இவரது புகைப்படம் உண்டு. திட்ட இயக்குனர் அபுலுக்கு பல ஆண்டுகளாக ஜோதியினை நன்றாக அறியும். வேனல் கால வெயிலுக்கு ஜோதியின் இளநீர் அத்தியாவசியம். இவரை நேர்காணல் செய்ய தீர்மானித்து இன்று ஜோதியின் வீடு தேடி அபுலும் நானும் சென்றோம். பரஸ்பரம் நலம் விசாரித்தபின்பு வந்த காரணத்தை விளக்கினேன். “உங்களது புகைப்படம் எங்களிடம் உள்ளது.. ஆவணம் செய்ய உங்களைக் குறித்த விவரம் வேண்டும்”, என்றேன். பல்வேறு பிரச்சினைகளினால் வாடியிருந்த முகத்தில், சட்டென வெட்கம் தோன்றி மறைந்தது. சத்தம் கேட்டு படுக்கையிலிருந்து வெளியே வந்த சகாதேவன் முகத்திலோ சிறு புன்முறுவல். “என்னப்பத்தி சொல்வதற்கு என்ன உள்ளது…சரி நீதான் கேளு? என்றார். ரெகார்டரை ஆன் செய்து வைத்துவிட்டு, நானும் கேள்விகளை கேட்க துவங்கினேன்.

தனது ஒரு வயதில் தந்தையை இழந்த ஜோதி, திருக்கோவிலூர் அருகிலுள்ள அத்திப்பாக்கம் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். பதினெட்டு வயதில் விவசாயக் கூலி வேலை செய்து வந்த சகாதேவன் அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. 1987ம் ஆண்டில் ஜோதியும் அவரது கணவர் சகாதேவனும் ரமணா ஆஷ்ரமம் முன்பு கடை போட்டனர். அப்பொழுது அந்த பகுதியில் வேறு கடைகள் ஏதும் இல்லை. சிறிய பெட்டிக்கடையிலிருந்து துவங்கிய இந்தக் கடை, படிப்படியாக டீ, டிபன், இளநீர் என பெருகி வந்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவில் நிலத்தில் தொழில் செய்த காரணத்தினாலும், பட்டா ஏதுமில்லாத காரணத்தினாலும் இவரது கடை அரசாங்கத்தால் உடைக்கப்பட்டது. மனம் தளராமல், அங்குள்ள புளிய மரத்தடியில் தனது இளநீர் வியாபாரத்தை மட்டும் தொடர்ந்து வந்தார். அவரது சிரிப்பு மாறாதது தான் சிறப்பு அம்சம். தற்பொழுது 55 வயதான இவருக்கு, இரண்டு மகள்களும் ஒரு மகனும். நான்கு பேரக்குழந்தைகளும் உள்ளன. வெளிநாட்டவர் பலருக்கும் இவரை நன்கு அறியும். இருந்த நிலம் ஒன்றை விற்று பெரும்பாக்கத்தில் சொந்த வீடு ஒன்று கட்டியுள்ளனர். மூத்த மகள் சுகுணா, ஸ்பானிஷ் நாட்டவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பத்து ஆண்டுகளில் மாரடைப்பு நோய்க்கு கணவரை இழந்தார். ஸ்பானிஷ் நாட்டு அரசாங்கத்தின் உதவி ஏதும் கிடைக்கவில்லை. சுகுணாவின் வருமானத்தை நம்பித் தான் இந்தக்குடும்பமே.

இனி எப்பொழுது கடை திறப்பீர்கள், என்ற என் கேள்விக்கு, “அது தெரியவில்லை. முடியுமா என்று சந்தேகம் உள்ளது. எனது காலும் அத்தனை சரியாக இல்லை. கணவருக்கும் பல நோய்கள்…” என்றபோது அவரது குரல் தளுதளுத்தது. நடக்கும் போது சரிந்து சரிந்து தான் நடக்கின்றார். மீண்டும் அவரது இளநீரை பருகும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணம், என்னுள் ஒரு பாரமாகவே மாறியது. விடைபெற்றுகொண்டு திட்ட அலுவலகத்திற்கு திரும்பி வந்தேன். நமது களஞ்சியத்தில் உள்ள அவரது புகைப்படத்தை கண்ட போது, ஒரு வித சந்தோஷம் தோன்றியது. புகைப்பட கலைஞர் வருண் குப்தா அவர்கள், பாரம்பரிய முறையிலே, பிலிம் கேமரா கொண்டு இந்த புகைப்படத்தை எடுத்தார். “மூன்று பேரு வந்திருந்தார்கள். கண்ணாடி வச்ச தம்பி, ஒரு பெட்டுக்குள்ள போயிட்டு, கருப்பு துணி போட்டு மூடிக்கிட்டாரு. கொஞ்ச நேரத்திற்கு பிறகு ரொம்ப நன்றிம்மான்னு சொல்லிட்டு போயிட்டாரு…. ” என்று ஜோதி கூறியது என் நினைவுக்கு வந்தது. வருண் குப்தா, Project 365 / ‘தினம் ஒரு புகைப்பட திட்ட ‘போட்டோ சேவையின்’ பாகமாக அச்சு ஒன்றும் கொடுத்துள்ளார். முடிந்தவரை புகைப்பட அச்சுகள் எடுத்துக்கொடுப்பது தினம் ஒரு புகைப்பட திட்ட நடைமுறையாகும். தற்பொழுது, பட்டா வாங்கியுள்ள பலரின் பெரிய கடைகளை ரமணா ஆஷ்ரமம் பகுதிகளில் காணலாம். ஜோதி போன்ற சிறிய தெரு வியாபாரிகள் மிகுந்து இருந்த பழமை மிகுந்த திருவண்ணாமலையில், தற்பொழுது பெரிய பெரிய வியாபாரங்களும், வெளிநாட்டவரின் கடைகளும், பெரிய ஹோட்டல்களும் தான் பரவி உள்ளது. இந்த பெரிய முதலைகளுக்கு மத்தியில், ஜோதி போன்றவர்க்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. இவர்களெல்லாம் இனி நமது இனிப்பான நினைவுகளில் மட்டும்தான்…. ஜோதியின் வியாபாரத்தில் நேர்மை உண்டு. பல அடியார்களுக்கு காசு வாங்காது இளநீர் கொடுப்பார். மற்றும் பல விதமான அன்பான பரிமாற்றங்களால் பலருக்கும் ஆனந்தம் தருவார். நாய், பூனை, மாடுகள் பலவும் அவரது வீட்டில் ஒரு அங்கம். வெயிலுக்கு குளிரான நீர், மனதிற்கு இதமான சொற்கள், பார்வைக்கு சிரித்த முகம், வியாபாரத்தையும் தாண்டிய ஒரு பந்தம் – இவையெல்லாம் இனி காண அரிதாகும். திருவண்ணாமலை நகரிற்கும் இங்கு வருபவர்களுக்கும் ஜோதி அளித்துள்ள பங்களிப்பிற்கு நன்றி கூறியபடியே, வெயிலின் கதிர் வீச்சுகளை எதிர்கொள்ள கிளம்பினோம், ஜோதியின் இளநீரின்றி…

பின் குறிப்பு: இந்த நேர்காணல் எழுதி மூன்று மாதங்களுக்கு பின்பு இன்று காலை ஜோதியை அவரது கடையில் வைத்து மீண்டும் சந்தித்தோம். “உடல் நிலை கொஞ்சம் பரவாயில்லை அதான் திரும்ப கடை துவங்கிட்டேன்”, என்றார் புன்சிரிப்புடன்.